சேலம்: அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து அரசியல் செய்யாமல் சேலத்திற்கு அடிக்கடி வருவது ஏன்? என்பதன் ரகசியம் வெளியாகியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் அவரை மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். கடந்த 2 நாட்களாக வீட்டிலேயே அவர் இருக்கிறார். இதற்கிடையில், சென்னை கட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கி வரும் நிலையில் அவர் சேலத்தில் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘சென்னையில் இருந்து அரசியல் செய்ய வேண்டிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி சேலத்திற்கு வந்து விடுகிறார். இதனால் அவரை சந்தித்து பேச முடியாத நிலை அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எந்த விவகாரமாக இருந்தாலும் சேலத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் அவர் அடிக்கடி சேலத்திற்கு வருவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தான் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
முக்கியமான காலக்கட்டத்தில் கேரளாவை சேர்ந்த நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடக்கும். எந்தவித தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருந்து யாரிடமெல்லாம் பேச வேண்டுமோ அத்தனை விவகாரங்களையும் பேசுவார். இதற்காகத்தான் அடிக்கடி சேலத்திற்கு வருகிறார். சென்னை மற்றும் எடப்பாடியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் மட்டும் எந்தவிதமான கேமராக்களும் இருக்காது. இந்த வீட்டில் வைத்து நடக்கும் பூஜைகள் அவருக்கு கை கொடுக்கும். இதேபோல் ரகசிய சந்திப்புகள் எல்லம் இங்குதான் எடப்பாடியால் நடந்த முடியும்’ என்றனர். இதற்கிடையில் இன்று சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு செல்கிறார். நாளை (திங்கள்) சென்னை செல்ல முடிவு செய்துள்ளார்.
