பைக், ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவருக்கும் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

சென்னை: பைக், ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவரும் இன்று முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வருகின்றனர். வாகன விதிகளை மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்தவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இம்மாதம் 15ம் தேதி வரை இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தும், 841 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இதில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 80 பேரும், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 18 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 714 இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 127 பேர் பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இன்று (23ம் தேதி) முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் நபர்கள் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து. விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: