2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மாயமான கணவனை இறந்துவிட்டதாக கூறி அவருக்கு இறுதிசடங்கு செய்யப்பட்டது. அவர் திடீரென வீடு திரும்பியதால் குடும்ப வழக்கப்படி தம்பதிக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்ட விநோத சம்பவம் நடந்தது. ஒடிசா மாநிலம் ஜெய்பூர் அடுத்த போரிகும்பா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின கூலித் தொழிலாளி அமானத்யா (49). இவரது மனைவி சுபரணா (45). இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் 2020ம் ஆண்டு கூலி வேலை ெசய்து பிழைப்பு நடத்துவதற்காக திருப்பதிக்கு புறப்பட்டார். நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடன் சென்ற மற்ற தொழிலாளர்களும், அவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். எட்டு மாதங்களாக அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனதால், அமானத்யா இறந்துவிட்டதாக உறவினர்களும், ஊர்மக்களும் முடிவு செய்தனர். கிராம வழக்கப்படி அமானத்யாவுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

சுபரணாவை விதவை கோலத்திற்கு மாற்றினர். அவரும் விதவையாகவே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக நடந்து முடிந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமானத்யா திடீரென தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் மற்றும் அவரது மனைவி சுபரணா, அமானத்யாவை பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றனர். விதவை கோலத்தில் இருக்கும் சுபரணாவுடன் சேர்ந்து வாழ, அவரது குடும்பத்தினரும் ஊர் மக்களும் அமானத்யாவை அனுமதிக்கவில்லை. சுபரணா வசித்த வீட்டில் தங்குவதற்கும் அனுமதி மறுத்துவிட்டனர்.

நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சுபரணாவை மறுமணம் செய்து கொள்ள அனுமதித்தனர்.

அதற்காக அமானத்யா சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று கூறினர். அவர்கள் கூறியபடி, அமானத்யாவிற்கும், சுபரணாவுக்கும் பழங்குடியினர் முறைப்படி சில சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் இருவருக்கும் அவர்களது குடும்ப முறைப்படி திருமணம் நடந்தது. இதுகுறித்து சுபரணா கூறுகையில், ‘அவரது (கணவர்) இறுதிச் சடங்குகளை செய்யும் போது மிகவும் வருந்தினேன். காணாமல் போன ஒருவருக்கு இறுதி சடங்கு செய்கிறோமே? என்று வருத்தப்பட்டேன். கடவுளின் அருளால், அவர் மீண்டும் உயிருடன் வந்துள்ளார். கடந்த காலத்தில் என் கணவருடன் வாழ்ந்தது போல், மீண்டும் அவருடன் வாழ முடியும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

Related Stories: