கேபிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது :தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு

டெல்லி : தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கேப்பிடேஷன் பீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சீரமைப்பது தொடர்பாக ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சல்மான் குரிஷித் தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் கேப்பிடேஷன் கட்டணம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யும் வகையில் கல்வி கட்டணங்களை ரொக்கமாக வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டார்கள். மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு, நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கல்லூரி நிர்வாகங்கள் தன்னிச்சையாக கல்விக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கூடுதல் கட்டண வசூலை தடுக்க, பிரத்யேகமாக இணையதள பக்கம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்ட அவர்கள், அதில் தனியார் கல்லூரி கட்டண விவரங்களை பதிவேற்ற உத்தரவிட்டுள்ளனர். மாணவர்கள் கூடுதல் கட்டண புகார்களை அந்த இணையதளம் வாயிலாக தெரிவிக்கவும் வழிவகை செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் இந்த இணையதளம் தொடர்பாக மாணவர் சேர்க்கை காலங்களில் பத்திரிகை வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Related Stories: