பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதா? 29 செல்போனில் ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக, 29 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தன.

இதையடுத்து, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக 13க்கும் மேற்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வு நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி உத்தரவிட்டது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வின் முன்னிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் 29 மொபைல் போன்கள் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் விரைவில் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது இடைக்கால அறிக்கை தான். இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார். இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

Related Stories: