கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு: 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசை

திருமலை: கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து, 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

கொரோனா குறைந்து வருவதால், இலவச தரிசனத்தில் கட்டணமின்றி தரசிக்க வரும் பக்தர்கள், வைகுண்டம் வளாகத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளிலும் நிரம்பி உள்ளனர். நேற்று முன்தினம் 31 அறைகளும் நிரம்பி, 2 கிமீ.க்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது. ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள், 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அறைகள் கிடைக்காமல் சமுதாய கூடங்களில் மக்கள் தங்குகின்றனர். வைகுண்டம் காத்திருப்பு அறை, தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்களுக்காக பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ மையம், அன்ன பிரசாதம் வழங்கும் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் 21ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.   ஜூலை மாதம் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு 22ம் தேதி(நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. எனவே, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என அதில் கூறப்பட்டிருந்தது.

பொருட்களை விற்க புதிய மொபைல் ஆப்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு கூட்டம், தலைமை செயல் அதிகாரி தர்மா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், ‘சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு ட்ரை ப்ளவர் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட அகர்பத்தி, பஞ்சகவ்யா பொருட்கள், போட்டோ பிரேம்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதற்காக, திருமலையில் உள்ள அனைத்து விற்பனை கவுண்ட்டர்களிலும் ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். லட்டு கவுண்ட்டர் அருகே கூட்டம் அதிகமாக இருந்தால், சிறப்பு தயாரிப்பு கவுண்டர்களை அங்கு அமைக்க வேண்டும். காலண்டர்கள், டைரிகள் விற்பனை செய்வது போல் இந்த பொருட்கள் அனைத்தும் தபால் துறை மூலம் ஆன்லைனில் பக்தர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம், பக்தர்கள் திருப்பதி அல்லது திருமலைக்கு வரவில்லை என்றாலும் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். எனவே, தேவஸ்தான தயாரிப்புகளை விற்க புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: