நாமக்கல் அருகே யூ டியூப்பில் பார்த்து ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த 2பேர் கைது

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பெருமாள் கோயில் மேடு பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்திற்குள் கடந்த 5ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், வெல்டிங் மெஷினால் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ₹4 லட்சத்து 89 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில், சேலம் அஸ்தம்பட்டியில் டீக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரும், அதே பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துணி வியாபாரியும் சேர்ந்து, ₹4.89 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, புதுச்சத்திரம் அருகே ஏ.கே.சமுத்திரம் தனியார் பள்ளி பகுதியில் போலீசார் மறித்தும் நிற்காமல் சென்ற காரை துரத்திச் சென்று மடக்கினர். காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் சுரேஷ் புராஜாபாத்(32), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துணிக்கடைக்காரர் முகமது இம்மரான்கான்(28) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட்டவர்கள் என தெரிந்தது.

அவர்களிடமிருந்து கார் மற்றும் கோடாரி, கடப்பாரை, காஸ் ெவல்டிங் மெஷினையும், ₹1 லட்சத்து 58 ஆயிரத்தையும் கைப்பற்றினர். மீதி தொகையை செலவு செய்து விட்டதாக  தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்வி அளித்த பேட்டியில், ஏடிஎம்களை எப்படி திறப்பது என்பது குறித்து யூடியுப்பில் பார்த்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களான இருவரும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடித்துள்ளனர். வேறு இடத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் இவர்களுக்கு தொடர்பிருக்குமா என விசாரிக்கிறோம் என்றார்.

Related Stories: