பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பாட்னா: ``அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. எனவே, தனியார் பள்ளியில் படிக்க உதவுங்கள்,’’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் 6ம் வகுப்பு மாணவன் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வைரலானது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ், அம்மாநிலத்தில் 2016ம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்நிலையில், நிதிஷ்குமார் தனது மனைவியின் நினைவு தினத்தையொட்டி நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான கல்யான் பிகா சென்றிருந்தார்.

அப்போது, அவரிடம் பேசிய 11 வயது நிரம்பிய, 6ம் வகுப்பு மாணவன் சோனு, ``சார், உங்களை கை கூப்பி கேட்டு கொள்கிறேன். எனக்கு படிக்க விருப்பம். தயவுசெய்து உதவுங்கள். நீமா கவுலில் உள்ள அரசு பள்ளியில் தரமான கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. எனவே, தரமான கல்வி கிடைக்க என்னை தனியார் பள்ளியில் சேர்த்து விடுங்கள்,’’ என்று கேட்டுக் கொண்டான். அவனின் தன்னம்பிக்கை, உறுதியை பாராட்டிய முதல்வர் நிதிஷ்குமார் அம்மாணவனின் படிப்பை கவனிக்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் சோனு, ``எனது தந்தை ரன்விஜய் யாதவ் தயிர் விற்று வருகிறார். நானும் அவரும் சேர்ந்து சம்பாதிக்கும் பணத்தில் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். தனியார் பள்ளியில் படிக்க போதிய பணம் என்னிடமில்லை,’’ என்று கூறினான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: