வெற்றிலை, சூலத்துடன் தனியார் நிறுவனத்தில் பூஜை செய்து 100 பவுன் நகை, பணம் கொள்ளை : கொல்லம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரத்தில் மது, சூலம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து பூஜை நடத்தி தனியார் நிறுவனத்தில் 100 பவுன் நகை மற்றும் ₹ 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். அங்குள்ள ஜனதா சந்திப்பு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு இந்த நிதி நிறுவனத்திற்கு விடுமுறையாகும். இந்நிலையில் நேற்று காலை நிறுவனத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பத்தனாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நிறுவனத்தின் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ₹4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் அங்குள்ள ஒரு அறையில் 3 பிளாஸ்டிக் இலைகளில் மது, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழத்தில் ஒரு சூலம் குத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தது. தவிர மாவிலை தோரணம் அணிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கும்பிடும் ஒரு கடவுளின் புகைப்படமும் இலையில் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிப்பதற்கு முன்பு திருடர்கள் பூஜை நடத்தி இருக்கலாம் என்றும், தமிழகத்தை சேர்ந்த கும்பல்தான் இந்த கொள்ளையை நடத்தியிருக்கும் என்றும் போலீசார் கருதுகின்றனர். நிதி நிறுவனம் 3 மாடி கட்டிடத்தில் 2வது மாடியில் உள்ளது. 3வது மாடி வழியாக கொள்ளையர்கள் 2வது மாடிக்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: