காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து, வியாபாரிகள், தங்களுக்கு மாற்று இடம் தேவையில்லை. ஏற்கனவே இருந்த இடமே வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர்.

இதற்கிடையில், கடந்த 7 நாட்களுக்குள் கடைகளை நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட புதிய மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என காய்கறி வியாபாரிகளுக்கு, நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்கறி வியாபாரிகளுக்கு, மீண்டும் பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் குமரவேல் வரவேற்றார். பார்த்தசாரதி, ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Related Stories: