ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள  ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆணையம், கூடுதலாக 7 தொகுதிகளை உருவாக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நகரை சேர்ந்த  2 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், அசாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு  ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது.

பின்னர்,  ஜம்மு காஷ்மீரில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது,’  என்று கூறியுள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ், ‘தொகுதி சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?’ என்று மனுதாரர்களை கேட்டனர். பின்னர், மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசு, ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: