தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்கு போடுவதை நிறுத்தி வைக்க முடியுமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றால், அதுவரையில் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா?’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் சட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய ஒன்றிய அரசு, பின்னர் இந்த சட்டப்பிரிவுகளின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரையில் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்றும் நேற்று முன்தினம் கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘தேசத்துரோக சட்டங்களை மறுபரிசீலனை செய்வது அல்லது திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும,’ என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் வரை, இந்த சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய மாட்டோம் என்ற உறுதியினை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய மூன்று அல்லது நான்கு மாதம் இதற்கான பணியினை நிறைவு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றால், அதுவரை தற்காலிகமாக இந்த சட்டப்பிரிவை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசால் கேட்டுக் கொள்ள முடியுமா? மறுபரிசீலனை செய்யும் வரை நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதுவரை தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோகம் வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்படும் தேசத் துரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்,’ என கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: