ரூ.1,710 கோடியில் கட்டப்படும் பாலம் இடிந்தது ஐஏஎஸ் அதிகாரி இப்படி சொல்லலாமா?: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

பாட்னா: பீகாரில் ரூ.1,710 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததற்கு காற்றும், மூடுபனியும் காரணம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதற்கு, அமைச்சர் நிதின் கட்கரி வேதனை அடைந்தார். பீகார் மாநிலம் சுல்தங்கஞ்ச் மற்றும் அகுமானி காட் இடையே கங்கை நதியின் மேல் பாலம் கட்டும் பணி 2014ல் துவங்கியது. ரூ.  1,710 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், கடந்த ஏப்ரல் 29ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பாலம் விபத்து குறித்து ஒன்றிய அமைச்சரர் நிதின் கட்கரி கூறுகையில், ‘இடிந்து விழுந்த பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.

ரூ.1,710 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலம், பலத்த காற்றினால் இடிந்து  விழுந்ததாக, சம்பந்தப்பட்ட துறை செயலாளர் கூறினார். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பலத்த காற்று மற்றும் மூடுபனியின் காரணமாக புதியதாக கட்டிய பாலம் எப்படி இடிந்து விழும்? என்பது தெரியவில்லை. ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை தருவதை என்னால் நம்பமுடியவில்லை? ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். அதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கலாம். தரத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல் பாலங்கள் கட்டவேண்டும். ரூ.1,710 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பாலம், தற்போது கட்ட முடியாமல் போனது குறித்து விசாரணையில் தான் தெரியவரும்’ என்றார்.

Related Stories: