திருப்பதியில் வரும் 17ம் தேதி நடக்கிறது பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்-எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருப்பதி : திருப்பதியில் வரும் 17ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எம்எல்ஏ கருணாகரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.புகழ்பெற்ற திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா நாளை காப்பு கட்டி வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை)  திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ கருணாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது எம்எல்ஏ கருணாகரன் பேசுகையில், ஆந்திர மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாளை  காப்பு கட்டுதலுடன் தொடங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தினம் ஒரு வேடமிட்டு அம்மனை தரிசிக்க வருவார்கள். இதனால் இந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் கொண்டிருக்கும். வெங்கடேஸ்வர சுவாமியின் சகோதரியான கங்கை அம்மனுக்கு தேவஸ்தானம் சார்பிலும் அரசு சார்பிலும் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

வரும் 17ம் தேதி  திருவிழா நாளன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதால் போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இப்பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பக்தர்களுக்கு இடையூறின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து வழிகளை மாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும். அம்மனுக்கு பொங்கல் வைக்க மார்க்கெட் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான கலைஞர்களை கொண்டு. இந்திரா மைதானத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கங்கையம்மன் திருவிழாவை அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, மேயர் சிரிஷா, மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: