பெங்களூரில் இருந்து சேலம் வந்த லாரியுடன் டிரைவரை கடத்திய கும்பல் கைது: ஹவாலா பணம் வருவதாக நினைத்து கைவரிசை

சேலம்: பெங்களூரில் இருந்து ஹவாலா பணம் வருவதாக நினைத்து சேலத்தில் லாரியுடன் டிரைவரை கடத்திய கேரளா கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதி மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று  பெங்களூருக்கு சென்றது. லாரியை பாலக்காட்டை சேர்ந்த சமீர் என்பவர் ஓட்டிச் சென்றார். அங்கு மாங்காய் லோடை இறக்கி வைத்து விட்டு மறுநாள் கேரளா நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. சேலம் கந்தம்பட்டி பைபாஸ் வழியாக வந்த போது, பின்தொடர்ந்து சொகுசு காரில் வந்த கும்பல் லாரியை வழிமறித்து டிரைவரை காரிலும், லாரியை வேறு டிரைவர் மூலமாகவும் கடத்திச்சென்றது. பின்னர் இந்த கும்பல் காரில் கடத்திச் சென்ற டிரைவர் சமீரிடம் இருந்து ரூ.2 ஆயிரம், செல்போனை பறித்துக் கொண்டு நாமக்கலில் இறக்கி விட்டு தப்பியது. டிரைவர் அங்கிருந்து வந்து, சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில், கேரளாவை சேர்ந்த கும்பல் லாரியுடன் டிரைவரை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, திருச்சூர் விரைந்த போலீசார் டிரைவரை கடத்திய சிரிஜான்(எ)சுஜூ ஒட்டகம்(39), எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜிஸ் பாஸ்கரன் அனி(39),  திருச்சூரை சேர்ந்த உன்னிகண்ணன்(எ) நிகில்(31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரில் இருந்து வந்த லாரியில் ஹவாலா பணம் மற்றும் மாங்காய் விற்பனை செய்த பணம் கொண்டு வருவதாக நினைத்து லாரியுடன் டிரைவரை கடத்திச் சென்றது தெரிந்தது. பணம் எதுவும் இல்லாததால் டிரைவரை நாமக்கல்லில் இறக்கி விட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட மற்ற 6 பேரை சேலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: