அரசு பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த கைபேசி செயலி: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: அரசுப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்த செயலி மூலம், தெரிவு அறிவிக்கைகள், தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள், எழுத்துத் தேர்வின் முடிவுகள் மற்றும் தெரிவுகளின் இறுதி முடிவுகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள், சான்றிதழ் சரிபார்த்தல், நேர்முக காணல் குறித்த விவரங்கள், கலந்தாய்வுகள், ஆளுறியச் சான்றிதழ், பதிவிறக்கம் செய்தல் போன்றவற்றை இச்செயலி மூலம் மேற்கொள்ள இயலும். விண்ணப்பதாரர்கள், தெரிவு முகமையின் இணையதளம் தவிர, இந்த கைபேசி செயலி மூலமாகவும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயலும். இத்திட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 ஆய்வுக் குழுக்களால் இணையவழியில் துறை அலுவலர்களுக்கு முன்னோடி, குறுகிய மற்றும் புத்தாக்க பயிற்சிகளின் பாடத்திட்டங்களை இணையவழித் தொகுதிகளாக தயாரித்து, துறை அலுவலர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழிப் பயிற்சிகளுக்குப்பின் சிறு தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு சொந்தமான, காலியாக உள்ள 18 ஏக்கர் நிலத்திற்கு வேலி அமைத்து, சமூக காடு வளர்ப்புத் திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக்கப்படும். இதற்காக, ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு இடைக்கால பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* பேரவையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் நீக்கம்

பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: 2019-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தின்படி, மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம், அரசியலமைப்பின் தொடக்கத்தில் இருந்து 70 ஆண்டு முடிந்த பின் செயலற்று போக வேண்டும். அதன்படி சட்டசபைக்கு 2021-ம் ஆண்டில் இருந்து பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படவில்லை. எனவே அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தையும் திருத்த அரசு முடிவு செய்துள்ளது. அதை நிறைவேற்ற இந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.

* அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சுக்கு உறுப்பினர்கள் வரவேற்பு

சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின்கீழ் அறிவித்த திட்டத்தை வரவேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: முதல்வர் பேரவைக்குள் நுழைகின்ற காட்சியை பார்க்கும்போது, ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட சாமான்ய மக்களை கை தூக்கிவிட 2ம் கலைஞர் பராக், பராக், பராக்’ என்று சொல்கின்ற ஓர் உணர்வோடு இன்றைக்கு பார்த்துக்கொண்டிருக்கின்றேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்பது எவ்வளவு பெரிய திட்டம் என்பதை போகப் போக உணர போகிறீர்கள். காலை சிற்றுண்டி திட்டம் என்கின்ற இந்த திட்டத்தின்மூலம் மேலும் உணவு வழங்குகின்றார். இனி தொடர்ந்து கழக ஆட்சிதான் என்று முதல்வர் சொன்னார். பேரவை தலைவர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், “ஏற்போர், ஆம் என்க; மறுப்போர் இல்லை என்க; ஏற்போரே அதிகம், மறுப்போரே இல்லை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது” என்கின்ற நிலைதான் தமிழகத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சை, அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி, வரவேற்று ரசித்தனர்.

Related Stories: