சென்னை, டிச.16: சென்னை மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான புதிய இரவு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை, சென்னையின் மிகவும் பிரபலமான பொது இடங்களில் ஒன்றாகும். இது தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் கடற்கரை அணுகக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாநகராட்சி பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக, யாசகம் கேட்பவர்கள், முதியவர்கள் மற்றும் வீடற்றோர் மெரினா கடற்கரையின் மணலில் அல்லது அருகிலுள்ள உள் சாலைகளில் இரவில் தூங்கி வருகின்றனர். இது பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் பலர் மாநகராட்சியிடம் கவலை தெரிவித்தனர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய கடற்கரையிலேயே ஒரு தனி இரவு தங்கும் விடுதியை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது, அதன்படி அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரை அருகே வீடற்றோருக்கான புதிய இரவு தங்கும் விடுதியை அமைத்துள்ளது. இது இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த விடுதி, அண்ணா சதுக்கம் அருகே உள்ள 2,400 சதுர அடி வெற்றிட நிலத்தில் ரூ.86.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது . மாநகராட்சி அதிகாரிகள் தற்போது பாதைகள் அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த விடுதி 80 வீடற்றோரை தங்க வைக்கும் அளவு கொண்டதாக இருக்கும். அங்கு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவுள்ளது
இந்த விடுதியில் , தங்குவோருக்கு மேட்கள், தலையணைகள், போர்வைகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் கழிப்பறை வசதிகளும் அமைக்கப்படவுள்ளது. விடுதியின் பராமரிப்பு ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கூடுதலாக, இங்கு தங்குபவர்களுக்கு இரவு உணவு அம்மா உணவகங்கள் மூலம் வழங்க என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விடுதி இம்மாத இறுதியில் முறைப்படி திறக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி, சமூக நலன் சார்ந்த இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
