பெருந்துறை அருகே விபத்து லாரி-ஆம்னி பஸ் மோதி பெண் பலி; 13 பேர் காயம்

ஈரோடு: பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 30 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை சேலம் மகுடஞ்சாலையை சேர்ந்த டிரைவர் பெருமாள் (60) ஓட்டினார். இவருக்கு உதவியாக செல்வராஜ் (61) என்பவர் இருந்தார். நேற்று அதிகாலை பஸ் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தது.அப்போது பஸ்சுக்கு முன்பு சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிய லாரி சென்றது. எதிர்பாராதவிதமாக லாரியின் பின் பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. பஸ் பயணிகள் இடுபாடுகளில் சிக்கி அலறி சத்தம்போட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் திண்டுக்கல் பழைய கன்னிவாடியை சேர்ந்த அங்கமுத்து  மனைவி சரஸ்வதி (74) சம்பவ இடத்திலேயே பலியானார்.

பஸ் டிரைவர் பெருமாள் (60), உதவியாளர் செல்வராஜ் (61) மற்றும் பஸ்சில் பயணித்த பிரபாகரன் (43), உடுமலை  கிருஷ்ணவேணி (52),   பெங்களூரு பிரகாஷ் (54), திருப்பூர் கிருஷ்ணன் (59), கதிரேசன் (80),   பெங்களூரு ராமமூர்த்தி (47), பொள்ளாச்சி ரவிக்குமார் (47), திருப்பூர் ரகுபதி (52),   பாலு (47), பொள்ளாச்சி பவித்ரா (26), பவித்ராவின் குழந்தை சித்தார்த் (2 )   உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆம்னி பஸ் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: