பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

*வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் சிக்கியது

நாகர்கோவில் : குமரி மாவட்டம் தோவாளை அருகே சட்டவிரோதமாக பாறைகளை உடைக்க வைத்திருந்த 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்களை வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் கைப்பற்றினர்.குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் அருகே ஞானதாசபுரத்தில் அரசு புதிதாக கட்டியிருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள தாண்டிப்பனை என்னும் இடத்தில் சட்ட விரோதமாக பாறைகளை வெடி மருந்து வைத்தும், கனரக வாகனங்களை வைத்தும் சிலர் உடைத்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக தோவாளை தாசில்தார் கோலப்பனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மண்டல துணை தாசில்தார், விஏஓ கலா, வருவாய் ஆய்வாளர் ராணி நாகேஷ்வரி மற்றும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதில் அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்திவரும் சதீஷ்கிருஷ்ணா என்பவருக்கு உரிமைப்பட்ட நிலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மூன்றுக்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.

மேலும் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக அதிகமாக மண் திருடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. பாறைகளுக்கு வெடி மருந்து வைத்திருப்பதும் கண்றியப்பட்டது. இது தொடர்பாக விஏஒ கலா மூலம் பூதப்பாண்டி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் பூதப்பாண்டி போலீசார் சதீஷ்கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டரின் ஆணைப்படி நேற்று திருநெல்வேலியில் இருந்து வெடிகுண்டுகள் கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தாசில்தார் கோலப்பன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பாறைகளில் ஆய்வு செய்தனர். அப்போது பாறைகளை வெடி வைத்து தர்க்க ஜெலட்டின் குச்சிகள் ஒயர்களுடன் இணைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் அங்கிருந்து 55 ஜெலட்டின் குச்சிகள், 40 மீட்டர் கார்டெக்ஸ் ஒயர், 22 டெட்டனேட்டர் போன்றவற்றை குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

The post பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: