வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை

பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி மனைவி தமயவள்ளி, மகன் சந்தோஷ் குமார்(13) உள்ளனர். மணிமுத்து 2018ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். மார்ச் 30ம் தேதி உணவு அருந்தி விட்டு அருகில் இருந்த இரும்பு தகரத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த மணிமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி தமயவள்ளி மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களில் மனு அளித்துள்ளார். ஆனால் உயிரிழந்த மணிமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க சவுதி அரேபியா அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மணிமுத்துவின் மகன் சந்தோஷ்குமார் கூறுகையில், நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தனது தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

அவரை பார்த்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிரிழந்த தந்தையின் முகத்தையாவது பார்க்க வேண்டும். உயிரிழந்த எனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.வெளிநாட்டில் உயரிழந்த மணிமுத்துவின் மனைவி, மகன் மட்டுமல்லாமல் கருத்தனேந்தல் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சவுதி அரேபியாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணிமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: