ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸ் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டி: ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. நாட்கள் செல்ல, செல்ல சூரியன் வீட்டின் மொட்டை மாடியில் வந்து இறங்கிவிட்டதோ என்ற சந்தேகப்படும் வகையில் வீட்டிற்குள் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் முடங்கிய மக்களுக்கு மேலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசிவருகிறது. ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையி 108 டிகிரியை தொட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குளு, குளு இடங்களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்கு குடும்பத்தோடு படை எடுத்து வருகின்றனர்.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஊட்டியிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மழை மற்றும் குளுமை இல்லாமல் வெயில் அதிகரித்துள்ளது. பல இடங்களில் காட்டுத்தீயும் பற்றி எரிகிறது. இந்தநிலையில், ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட நேற்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. ஊட்டியில் 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 1951ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம். கடந்த 73 ஆண்டுகளில் இன்றுதான் ஊட்டி மிகவும் வெப்பமான தினத்தை சந்தித்திருக்கிறது. இது தொடர்பாக அதிக வெப்பம் குறித்து ஒப்பீட்டு அட்டவணையை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

 

The post ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸ் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: