விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை

சென்னை: விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த 19-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், மறுநாள் விசாரணையின் போதே விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட்டார்.

அதன்பின், இந்த வழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தெர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய எஸ்சி எஸ்டி ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திலும் சென்று சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை கைதி விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணம் தொடர்பாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட விக்னேஷ் மரணம் தொடர்பாக 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: