எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது: ரம்ஜான் பண்டிகையையொட்டி 5 கோடி ரூபாய் வரை விற்பனை

எட்டயபுரம்: எட்டயபுரம் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது. ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தென்மாவட்டங்களில் உள்ள ஆட்டுச்சந்தைகளில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுசந்தை முக்கியமானதாகும். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் சந்தையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆட்டுவகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை ஆகும்.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில், சில வாரங்களாக ஆட்டுச்சந்தை சகஜநிலைக்கு திரும்பி உள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவிலேயே சந்தை கூடிய நிலையில் வியாபாரம் களைகட்டியது. ரம்ஜான் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ளதால், வழக்கத்தைவிட கூடுதலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

10 கிலோ முதல் 30 கிலோ வரை தரம்வாரியாக விற்பனை நடந்தது. விலையும் கிராக்கியாக இருந்தது. நேற்று காலையில் ஆடுகளை போட்டிப்போட்டு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.  நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: