கீரனூர் அருகே சீமானூர் ஜல்லிக்கட்டில் 23 பேர் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் சீமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 927 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீமானூரில் உள்ள ஐயனார்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். முதலாவதாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தப்படி சென்றது. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாட்டு காட்டின. இதன் அருகே மாடுபிடி வீரர்கள் செல்ல பயந்து தடுப்பு கம்பிகள் மேல் ஏறி நின்றதை காணமுடிந்தது. காளைகள் அவிழ்த்து விடப்படும்போது அதன் உரிமையாளர் மற்றும் காளையின் பெயரை விழாக்குழுவினர் ஒலி பெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் விடா முயற்சியுடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர்.

மாடுகள் சீறினாலும் துணிந்து சில வீரர்கள் களம் கண்டனர். அப்போது மாடுபிடி வீரர்களை விழாக்குழுவினர், பார்வையாளர்கள் பாராட்டினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், அண்டா, தங்கம், வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 927 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 300 பேர் களம் கண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர்.

காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் மேல் சிகிச்சைக்காக 6 பேர் கீரனூர் அரசு மருத்துவமனைக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

போதிய மருத்துவர்கள் இல்லை

ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை. மதியத்திற்கு பிறகு காயமடைந்தவர்களுக்கு செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். இதனால் காயமடைந்த வீரர்கள் போதிய சிகிச்சையின்றி தவித்தனர். இதனால் காயமடைந்தவர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: