எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிவிட்டர் ஊழியர்கள் வேலை பறிக்கப்படுமா?: சிஇஓ பராக் அகர்வால் கவலை

நியூயார்க்: டெஸ்லாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.3 லட்சம் கோடி தந்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு டிவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார்? என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது, டிவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், டிவிட்டர் ஊழியர்களிடம் பராக் அகர்வால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது,  ‘ரூ.3.36 லட்சம் கோடி தருவதாக மஸ்க் கூறியதாக நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்து மஸ்கிடம் கைமாறிய பிறகு, இந்த நிறுவனம் எந்த திசையில் செல்லும் என்று தனக்குத் தெரியாது. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்கள் அனைவருக்கும் பலவிதமான உணர்வுகள் உள்ளன. ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். இந்த தருணத்தில், எப்போதும் போலவே டிவிட்டரை இயக்குகிறோம்,’ என்றார்.

டிவிட்டர் நிறுவனத்தில் மாற்றம் தேவை என்ற மஸ்க் ஏற்கனவே கூறியுள்ளார்.  இதனால், மஸ்க்கின் கைக்கு டிவிட்டர் சென்றால், ஊழியர்கள் வேலை பறிபோகும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த யார் புதிதாக தேர்வு செய்யப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் முழுமையாக முடியும் வரை சிஇஓ பொறுப்பில் பராக் அகர்வால் தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: