சென்னை-ஈரோடு ரயிலில் 8 தோட்டாவுடன் துப்பாக்கியை தொலைத்த மாஜி ஐஜி பொன் மாணிக்கவேல்: ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஈரோடு: சென்னையில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. பயணிகளை இறக்கி விட்டபின், பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே பிரிவு அலுவலகம் முன் ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து வந்தனர். ரயிலின் ஏசி பெட்டியில் ஏசி சரிவர வேலை செய்கிறதா? என சோதனை செய்ய  ஏசி மெக்கானிக் ஒருவர் எச்ஏ1 பெட்டிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த சீட்டில் 8 தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கி கேட்பாரற்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், போலீசார் உடனடியாக வந்து  துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றினர். தொடர்ந்து அந்த பெட்டியில் வேறு ஆயுதங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். வேறு எந்த ஆயுதங்களும் இல்லை என்பது உறுதியானது. பின் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தவர்கள் பட்டியலை சரிபார்த்தனர். அப்போது சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பயணித்தது தெரியவந்தது. அவருக்கு ரயில்வே போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போதுதான் பொன்மாணிக்கவேலுக்கு அவர் எடுத்து வந்த துப்பாக்கி, தோட்டாக்களுடன் மாயமானது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் அவரது துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பொன் மாணிக்கவேல் பெற்றுக்கொண்டார்.

Related Stories: