குஜராத் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவ மையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

பனாஸ்கந்தா: குஜராத்தில் 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.  இதில் பாரம்பரிய மருத்துவத்தின் நலன்கள், பயன்கள் குறித்து பேசிய மோடி, ``இந்த மையம் அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் பாரம்பரிய மருத்துவமையமாக விளங்கும்,’’ என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டை சர்வதேச தானிய ஆண்டாக அறிவித்த ஐநா.வுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.  முன்னதாக, பனாஸ்கந்தா மாவட்டத்தின் தியோடரில் புதிய பால் பண்ணை வளாகத்தையும், பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையையும் பிரதமர் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய மோடி, ‘‘கூட்டுறவு பால் பண்ணைகள் சிறு விவசாயிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது. இன்று இந்தியா உலகளவில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக திகழ்கின்றது.’’ என்றார்.

மாறும் மரபு

வழக்கமாக சுதந்திரதினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் சீக்கிய மத குரு தேக் பகதூரின் 400வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு செங்கோட்டையில் இருந்து உரையாற்றுகிறார். பொதுவாக செங்கோட்டையில் காலை நேரத்தில் உரையாற்றும் மரபு இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. நாளை இரவு 9.30 மணியளவில் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றுகின்றார். பிரதமர் உரையாற்றுவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: