சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் சசிகலா, இளவரசிக்கு ஆஜராவதில் விலக்கு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு ₹2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு, கடந்த மாதம் 11ம் தேதி பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் நீதிபதி லக்ஷ்மி நாராயண பட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜராகி ஜாமீன் வழங்கும்படி கோரினர். இதை ஏற்று, இருவருக்கும் 3 லட்சம் ரொக்க தொகை பிணை அடிப்படையில் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

இதே வழக்கில் முதல் குற்றவாளியான சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், 2வது குற்றவாளியான சிறைத்துறை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோருக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நீதிபதி லஷ்மி நாராயண பட் விலக்கு அளித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் 3, 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறைத்துறை இணை கண்காணிப்பாளர் சுரேஷ், காவலர் கஜராஜ் மக்கன்னூரு ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா, இளவரசி சார்பில் ஆஜரான வக்கீல்கள், இவ்வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து சசிகலா, இளவரசிக்கு விலக்கு அளிக்கும்படி கோரினர். அதை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் விலக்கு அளித்து, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: