சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்: ஆஹா ஓடிடி தளம் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய வகையில் ஆஹா ஓடிடி தளம் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ஆஹா ஓடிடி தளத்தின் 100 சதவிகித தமிழ் தளத்தின் தொடக்க விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் தளத்தை தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வரவேற்றார். பிறகு கலைஞர் உருவச்சிலையை முதல்வருக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கலைஞர் பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, தயாரிப்பாளர் ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், மறைந்த இயக்குனர் கே.பாலசந்தருக்கான விருதை அவரது மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான விருதை அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கான விருதை அவரது மகள் லதா, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கான விருதை அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பிறகு அவர் பேசியதாவது: அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி. இந்த ஊடகத்தின் பெயரே ஆஹா. ஆஹா என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்போது, ரொம்ப பெருமையாக இருக்கும்போது, ஆஹா எவ்வளவு அழகாக பேசினான், ஆஹா என்ன அற்புதமாக நடிக்கிறான் என்று சொல்வதற்காக அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் ஆஹா ஊடகம் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மக்களுக்கு பயன்படக்கூடிய வகையிலும், சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய வகையிலும் இந்தப் பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருகாலத்தில் நாம் வானொலி மூலம் செய்தி கேட்டுக் கொண்டிருந்தோம். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் பல்வேறு வளர்ச்சிகளை நாம் கண்டு வருகிறோம். ஊடகம் மூலமாக இந்த சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய வகையில் இந்தப் பணியை தொடர ஆஹா நிறுவனத்தினரை வாழ்த்துகிறேன். இன்று (நேற்று) சித்திரைத் திருநாள். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்தியாவில் அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று (நேற்று).

நான் நேற்று (நேற்று முன்தினம்) சட்டமன்றத்தில் பேசும்போது, ‘அம்பேத்கரின் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்’ என்று அறிவித்தேன். அந்தவகையில் சமூக நீதியை வளர்க்க ஆஹா தளம் பணியாற்றும், பணியாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

Related Stories: