உத்தப்பா - துபே அமர்க்களம் சென்னைக்கு முதல் வெற்றி

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், உத்தப்பா - துபே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி முதல் வெற்றியை ருசித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. உத்தப்பா, ருதுராஜ் இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 17 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சிஎஸ்கே 6.4 ஓவரில் 36 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், உத்தப்பா - ஷிவம் துபே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு, பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்த உத்தப்பா 33 பந்திலும், துபே 30 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்து அசத்தியது. உத்தப்பா 88 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி ஹசரங்கா பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார். கேப்டன் ஜடேஜா சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். சென்னை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. நடப்பு தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இது. துபே 95 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), தோனி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூர் பந்துவீச்சில் ஹசரங்கா 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து, 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷாபாஸ் அகமத் அதிகபட்சமாக 41 ரன் (27 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். சுயாஷ் 34 ரன், தினேஷ் கார்த்திக் 34 ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் மகேஷ் தீக்சனா 4, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் எடுத்தனர். நடப்பு சீசனில் சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்றது.

Related Stories: