நிபுணர் குழு பரிந்துரைப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கிள்ளியூர் ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) பேசுகையில் ‘‘தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது. சுமார் 2,40,000 இளைஞர்கள் அரசு வேலை வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு 75,000 பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை. எனவே பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:பல வகையில் தகவல் அடிப்படையில் மேலாண்மை செய்ய வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார். அதற்கு ஏற்ப தொடர்ந்து தகவல்கள் சேகரித்து வருகிறோம். அதிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தனி சூழ்நிலை உள்ளது. கூடுதல் படிப்பு அறிவு, கூடுதல் நிர்வாகம், கூடுதல் பட்டதாரி. ஆனால் குறைவான வேலைவாய்ப்பு. இதை திருத்தம் செய்ய தொழில் ரீதியாகவும், பொருளாதார வளர்சிக்காகவும் அரசு ஆய்வு செய்து வருகிறது.

பொதுவாக கன்னியாகுமரி பொருளாதார வளர்ச்சிக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் பல பங்கு உள்ளது, அதை வேறு நாள் பேசலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பாக 2, 3 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. பல முறைகேடுகள் நடந்து, குளறுபடிகள் உள்ளது. பல ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆய்வு செய்யாமல் உள்ளது. இன்று 3 லட்சத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளன. சில இடங்களில் கூடுதலாக உள்ளனர், சில இடங்களில் யாரும் இல்லாமல் உள்ளனர். நிதி சுமை உள்ளது. ஒரு குழு அமைத்து மறு ஆய்வு செய்ய உள்ளோம் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி நிபுணர்கள் ஆலோசனைபடி முதல்கட்டமாக சில தெளிவுகள் வந்துள்ளது. 6 மாதத்திற்குள், பரிந்துரை படி திட்டத்தையே சிறப்பித்து, எந்த எந்த இடத்தில் எந்த தேர்வுகள் வைக்க வேண்டும் என பிறகு முடிவுகள் செய்வோம்.

Related Stories: