வேலூரில் மீண்டும் தலைதூக்கும் விவகாரம் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் சிரஞ்சு சாக்லெட்டுக்கள் விற்பனை: தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: கடந்த ஆண்டு வேலூர் நகரில் காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம் என அனைத்து பகுதிகளிலும் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளிலும், பள்ளிகளின் முன்பு நடைபாதை கடைகளிலும் சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லெட் விற்பனை கொடி கட்டி பறந்தது. பாதுகாப்பில்லாத வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் சிரஞ்சுகளை பழைய பொருட்களை விற்கும் வியாபாரிகளிடம் வாங்கி அதை சுத்தம் செய்து அதில் திரவசாக்லெட்டுகளை அடைத்து ₹5க்கு கடைகளில் விற்பதற்கு ஒரு கும்பல் அனுப்பி வைத்தது.குழந்தைகளை கவரும் வகையில் இருந்ததால் இதன் விற்பனை அதிகரித்தது. இந்த சாக்லெட்டை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி அறியாத பள்ளிப்பருவ பிள்ளைகளும், குழந்தைகளும் அதிகளவில் இதற்கு அடிமையாகினர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்களும், மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் தெரிவித்ததன் அடிப்படையில் தினகரனில் கடந்த ஆண்டு படத்துடன் விரிவான செய்தி டாக்டர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் விளக்கங்களுடன் வெளியானது.

இதையடுத்து இந்த சாக்லெட் விற்பனைக்கு முட்டுக்கட்டை விழுந்தது. இவ்விஷயத்தை அடியோடு மறந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலூர் பாகாயம், விருபாட்சிபுரம், வேலப்பாடி, சைதாப்பேட்டை, சேண்பாக்கம் பகுதிகளில் மீண்டும் சிரஞ்சு சாக்லெட் விற்பனை களைக்கட்டியுள்ளது.குழந்தைகள் மட்டுமின்றி இந்த சாக்லெட்டை விரும்பி சாப்பிடும் அனைவரின் உடல்நலத்துடன் விளையாடும் இந்த சாக்லெட் விற்பனையை கண்டறிந்து தடுப்பதில் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்புத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர்களிடம் கேட்டபோது, ‘நீங்கள் குறிப்பிடும் சிரஞ்சுகள் பயன்படுத்தப்பட்டவையாக இருக்க வாய்ப்பில்லை. அனைத்து பெரிய மருத்துவமனைகள் தொடங்கி தனியார் மருத்துவனைகள், சாதாரண கிளினிக்குகள் வரை மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவருமே ஊசி பயன்படுத்தாவிட்டாலும் அதற்கான கட்டணத்தை மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக செலுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. வேண்டுமானால் சாக்லெட் தயாரிப்பவர்கள் மருத்துவ தேவை என்று சொல்லி புதிய சிரஞ்சுகளை வாங்கலாம். அல்லது அதற்காகவே ஆர்டர் செய்தும் வாங்கலாம். அதேநேரத்தில் வெறும் சாக்லெட்டால் உடல்நலனுக்கு எந்த தீங்கும் இல்லை என்றாலும் பிளாஸ்டிக்குடன் சேர்ந்து வருவதால் அதற்கான பக்கவிளைவு கண்டிப்பாக இருக்கும். ஆகவே சிரஞ்சு சாக்லெட்டுகள் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது’ என்றனர்.

குஜராத்தில் தயாராகும் சிரஞ்சுகள்

குஜராத் மாநிலம் இந்தூரில் குழந்தைகளை கவரும் வகையில் சிரிஞ்சு சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாக்லெட்டுகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக்கால் குழந்தைகளுக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால், உடனடியாக சிரஞ்சு சாக்லெட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: