ஓட்டி பார்த்து விட்டு வருவதாக கூறி புல்லட்டுடன் மாயமான சேலம் காதல் ஜோடி கைது-பெங்களூரில் சிக்கினர்

சேலம் :  சேலத்தில் ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாக கூறி புல்லட்டுடன் மாயமான காதல் ஜோடியை பெங்களூருவில் போலீசார் மடக்கி பிடித்தனர்.சேலம் டவுன் சாந்தி தியேட்டர் அருகே இருசக்கர வாகன கன்சல்டிங் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் 2 இளம் காதல்ஜோடியினர் வந்தனர். இதில் ஒரு ஜோடியினர் ₹1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான புல்லட்டை தேர்வு செய்தனர். இதையடுத்து ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாக கூறி பைக்கில் அமர்ந்து மின்னல் வேகத்தில் பறந்தனர். அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

இதுதொடர்பாக டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த புல்லட்டுக்கு முன்பணமாக ₹25 ஆயிரம் கொடுத்திருப்பது தெரியவந்தது. புல்லட்டுடன் தப்பியது பிரவீன் (25) என்பதும், மற்றொரு ஜோடி அரவிந்த் என்பதும் தெரிய வந்தது. அதே நேரத்தில் பிரவீனுடன் சென்ற பிரீத்தி (25) என்ற இளம்பெண்ணின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் தங்களது மகள் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியாது என்று கூறிவிட்டனர்.

 இந்நிலையில் புல்லட்டுடன் தப்பிய காதல்ஜோடியை கைது செய்ய கமிஷனர் நஜ்முல்கோடா உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமாரி, மதன்மோகன், எஸ்.ஐ.ராஜேந்திரன், சிறப்பு எஸ்.ஐ. ரவி, ஏட்டு அம்சவள்ளி ஆகியோர் கொண்ட தனிப்படையிர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை காரென்னஹள்ளியில் உள்ள வீட்டில் பிரவீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று அதிகாலை வீட்டிற்கு சென்ற போலீசார் பிரவீன் மற்றும் பிரீத்தி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார் சேலம் அழைத்து வந்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான பிரவீனின் தந்தை முனிராஜ். 5 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பிரவீன்  பி.காம் படித்துள்ளார். விலை உயர்ந்த புல்லட்டுகளை திருடி விற்பனை செய்து ஜாலியாக இருக்கும் எண்ணம் கொண்டவர். இவர் மீது கிருஷ்ணகிரியில் 2 வழக்கும், தர்மபுரியில் ஒரு வழக்கும் உள்ளது. கருப்பூரில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தார்.

அதன்பின் சேலம் காந்திரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பில்லிங் பிரிவில் பணியாற்றிய பிரீத்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தான் புல்லட்டை திருடிச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி வண்டியை ஓட்டிப் பார்த்துவிட்டு வருவதாக கூறி ஏமாற்றி தப்பியது தெரியவந்தது.

புது புல்லட்டுடன் கர்நாடகா சென்ற பிரவீனுக்கு அங்கு வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் காதல் ஜோடியை மடக்கி, வண்டிக்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது அது தமிழகத்தில் திருடிவிட்டு வந்தது தெரியவந்தது. வண்டியை பறிமுதல் செய்த போலீசார், பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வண்டியின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் கர்நாடகா போலீசார் பேசிய போதுதான் பிரவீன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே பரவீன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். கர்நாடக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் சேலம் போலீசார் பெங்களூர் சென்று அதிரடியாக காதல் ஜோடியை கைது செய்தனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: