தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதியில் 4 டன் மலர்களால் அலங்காரம்: சுபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

திருமலை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.யுகாதி தெலுங்கு வருட பிறப்பு நேற்று உலகெங்கும் தெலுங்கு பேசும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல், வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் 4 டன் மலர்கள் கொண்டு, பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை சுப்ரபாத சேவைக்கு பிறகு அர்ச்சனை, தோமாலை ஆகியன நடைபெற்றதும், சுவாமிக்கு சுபகிருது ஆண்டுக்கான தெலுங்கு பஞ்சாங்கம் வாசித்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்ததும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், யுகாதி ஆஸ்தானத்தையொட்டி  நடைபெற இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது. இந்நிலையில், ஐதராபாத் நகரை சேர்ந்த அகர்வால் என்ற பக்தர், ஏழுமலையான் கோயிலில் மூலவர் சன்னதிக்கு மேல், ஆனந்த நிலைய கோபுரத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமியை சுற்றி வைப்பதற்காக, ₹5 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் செய்த அலங்கார வளைவை நன்கொடையாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம்  வழங்கினார்.

சுபகிருது ஆண்டில் ஏழுமலையான் அருளால் மக்கள் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமென்று, திருமலை தர்மகிரி வேதபாட சாலையில் லஷ்மி நிவாஸ மஹா தன்வந்திரி யாகம் நாளை(4ம் தேதி) முதல் 6 வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, இரவு அங்குரார்பணம் பூஜை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: