எடப்பாடி துவங்கி வைத்த திட்டத்திற்கு எதிராக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்: நாடகமாடுவதாக திமுக எம்எல்ஏ பதிலடி

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அரசு சார்பில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இதற்காக உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சியில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில், 2018ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், இந்த திட்டத்தை திமுகதான் கொண்டு வந்து, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி, அதனை கண்டித்து வேப்பனப்பள்ளி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தனியொரு நபராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடகமாடுகிறார்... கிருஷ்ணகிரி  மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, நேற்று  கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, விவசாயிகளை காப்பாறுவது போல  தனி ஒருவராக சூளகிரியில் உண்ணாவிரதம் இருந்தார். அது ஒரு நாடகம். கடந்த  2018ம் ஆண்டு, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தது அன்றைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி. அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது.

இப்போது திமுக ஆட்சியில்,  விவசாயிகளுக்கு எதிராக அந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக, தவறான கருத்தை  பரப்பி வருகிறார்கள். கெலமங்கலம் பகுதியில்,  சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தியது யார்? கே.பி.முனுசாமி  எம்எல்ஏ.வின் நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள். மேலும்,  கே.பி.முனுசாமிக்கு சொந்தமான 57 ஏக்கர் நிலம் அந்த பகுதியில் உள்ளது. அது  போய் விடக் கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்றார்.

Related Stories: