மயிலாடுதுறை அருகே ராட்சத குழாய்களை இறக்க வந்த ஐஓசி நிறுவன லாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் எண்ணெய் எரிவாவு எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக பேரளத்திலிருந்து கடந்த 2 நாட்களாக லாரிகளில் ராட்சத குழாய்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று லாரிகளில் குழாய்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டது. தகவலறிந்த கிராம மக்கள் லாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ராட்ச குழாய்களை இறக்கி வருகிறது.

உடனே அந்த குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த குழாய்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர். தகவல் அறிந்த ஐஓசி அதிகாரிகள் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், இது இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கான குழாய்களாகும். பேரளம் ரயில் நிலையத்திலிருந்து கொண்டுவந்து வை.பட்டவர்த்தி என்ற இடத்தில் அடுக்கி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கே எண்ணெய் எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கிடையாது. இப்பகுதி வயல்களிலும் இந்த குழாய்கள் பதிக்கப்படாது. குழாய்கள் தேவைப்படும் போது இவற்றை நிறுவனமே எடுத்து சென்றுவிடும் எனறனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: