சிறுமையிலூர் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம்: பனையூர் பாபு எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: சிறுமையிலூர் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடையினை பனையூர் பாபு எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சிறுமையிலூர் ஊராட்சியில் நியாய விலை கடை தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதனால், மழை காலங்களில் நியாய விலை கடையில் இருந்த பொருட்கள் மழை நீர் கசிவால் நனைந்து வீணானது.

இந்நிலையில், புதிதாக நியாய விலை கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் மு.பாபுவிடம் மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நியாய விலை கடைக்கான கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் சிம்பு வரவேற்றார். இதில், செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது, 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டுள்ளதாக கூறி எம்எல்ஏவிடம் உரிமைத்தொகை பெற்று தர மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ பனையூர் பாபு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், ஒன்றிய துணை செயலாளர் குமுதம் மதுரை, திமுக நிற்வாகிகள் ஜானகிராமன், சரவணன், பிரபு, ராஜேந்திரன், வெங்கட் மற்றும் விசிக நிர்வாகிகள் லிங்கம் ஐ.கிருஷ்ணன், அன்பரசு, மூர்த்தி, வினோத், சங்கர், செந்தில், தியாகராஜன், அருள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சிறுமையிலூர் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம்: பனையூர் பாபு எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: