உரிமையாளர் வாக்கிங் அழைத்து சென்றபோது தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்: மாங்காடு அருகே பரபரப்பு

குன்றத்தூர்: மாங்காடு அருகே ராட்வீலர் நாயை அதன் உரிமையாளர் வாக்கிங் அழைத்து சென்றபோது, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கு திருமணமாகி எலிசபெத் என்ற மனைவியும், துஜேஷ் (11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று வீட்டின் வெளியே துஜேஷ், மற்ற சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அவர்களது எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் வளர்த்து வரும் ‘ராட்வீலர்’ என்னும் உயர் ரக நாயை வாக்கிங் அழைத்துச்சென்றார். அந்த நேரத்தில், சிறுவன் துஜேஷ் அவனது வீட்டின் முன்புறம் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். வாக்கிங் சென்று கொண்டிருந்த நாய் திடீரென விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து ஆக்ரோஷமாக குறைக்க தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அந்த நாய் சிறுவன் துஜேஷை விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது. வலி பொறுக்க முடியாமல் சிறுவன் துஜேஷ் அலறி துடித்தான். இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கம் உடனடியாக ஓடிவந்து நாயிடம் இருந்து சிறுவனை மீட்டனர். அதற்குள், நாய் கடித்து சிறுவனின் தொடையிலிருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியது. காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மாடு முட்டுவதும், நாய் கடித்து குதறுவதும் தொடர் கதையாக அரங்கேறி வருகிறது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது இந்த பகுதியில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு முறையான அனுமதி பெறாமல் வீட்டில் வளர்த்து வருவதாகவும், சிறுவர்கள் விளையாடக் கூடிய நேரத்தில் தெருவில் நாய்களை அழைத்துச்செல்வதால், மேலும் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. வீட்டில் வளர்த்த நாய் சிறுவனை கடித்து குதறிய சம்பவம் மாங்காடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post உரிமையாளர் வாக்கிங் அழைத்து சென்றபோது தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்: மாங்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: