தா.பழூர் பகுதியில் கார்த்திகை பட்ட கடலை சாகுபடி அறுவடை பணியில் விவசாயிகள்

தா.பழூர் : தா.பழூர் பகுதியில் கார்த்திகை பட்டம் கடலை சாகுபடி செய்த வயலில் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள காரைக்குறிச்சி, இருகையூர், கோட்டியால், நடுவலூர், சுத்தமல்லி, காசங்கோட்டை, அணைக்குடம், சிந்தாமணி, கோடங்குடி, சோழமாதேவி, தென்னவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் பாசனம் மூலம் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பிரதான பயிராக கடலை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது கார்த்திகை மாதம் விதைப்பு செய்யப்பட்ட கடலை தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனை முன்னிட்டு விவசாயிகள் கூலி தொழிலாளி மூலம் கடலை அறுவடை செய்து வருகின்றனர். வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் குடை பிடித்து நிழலில் அமர்ந்து கடலை செடியில் இருந்து பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், கார்த்திகை பட்டம் கடலை அறுவடை போதுமானதாக உள்ளதாகவும், கடலை விதையை விவசாயிகளுக்கு குறைந்த எடையில் அதிக விளைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் விவசாயிகள் விளைவித்த கடலையை அதிக எடைக்கும் குறைந்த விளைக்கும் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

கடலை மூட்டை ரூ.9 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்படும் என நினைத்து இருந்த நிலையில். திடீர் என விலை குறைந்து ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அறுவடை துவங்கும் போதே விலை குறைந்ததால் விவசாயிகள் விற்பனை செய்வது சிரமமாக இருக்கும். ஆகையால் நெல், கரும்புக்கு உள்ளது போல் அரசு கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் விளைவித்த கடலையை விற்பனை செய்ய அந்தந்த பகுதியில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: