மெரினா கலங்கரை விளக்கத்தை தகர்ப்பதாக மிரட்டல் மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்: க்யூ பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை, சுற்றுலா பணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், மர்ம நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கலங்கரை விளக்கம் தகர்க்கப்படும் என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுபற்றி அறிந்த அதிகாரிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படத்துடன் மெரினா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலங்கரை விளக்கம் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதி முழுவதும் ரோந்து வாகனம் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் காணப்பட்டால் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அந்த மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் க்யூ பிரிவு போலீசாரும் மெரினா போலீசாருடன் இணைந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related Stories: