இடைக்கழிநாடு பேரூராட்சியில் துணை தலைவராக பாமக பிரமுகர் தேர்வு

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு, கடந்த 4ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு நடந்தது. அதில், அதிமுக வேட்பாளர் சம்யுக்தா  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தலைவர் தேர்தலில், அதிகாரிகள் முறைகேடு செய்தனர் என கூறி திமுகவினர் புகார் எழுப்பினர். பின்னர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அடுத்ததாக நடக்க இருந்த துணை தலைவர் தேர்தலை, வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.  இதனால், தேதி அறிவிக்காமல், துணை தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக வாக்குபதிவு நேற்று நடந்தது. இதில்,  திமுக சார்பில் மணிவண்ணன், பாமக சார்பில் கணபதி ஆகியோர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதில் பாமக சார்பில் போட்டியிட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் கணபதி, 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அவருக்கு கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: