சரவெடி தயாரிக்க அரசு அனுமதிகோரி 110 பட்டாசு ஆலைகள் கூட்டமைப்பு காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி முடிந்த 10 நாட்களில் அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி தொடங்கும். பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் கெமிக்கல் பயன்படுத்தவும், சரவெடி தயாரிக்கவும்  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து ஆலைகளில் பிஜிலி வெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு மற்றும் பச்சை உப்பு அல்லாத மற்ற வெடிகள் மட்டும் தயாரித்து வந்தனர். இதனால் 60 சதவீத தயாரிப்பு பணி மட்டும் நடைபெற்றது. பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க வேண்டும். தடையை மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

உச்சநீதிமன்றத்தில் சரவெடிக்கு தடை விதித்த வழக்கில் அப்பீல் மனு விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், பட்டாசு ஆலைகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, தனிப்படை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தி, 25க்கும் மேற்பட்ட ஆலைகளில், சரவெடி மற்றும் பேரியம் நைட்ேரட் பயன்படுத்தியதாக, அவற்றின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். எனவே, சரவெடி தயாரிக்கவும், பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரிக்கவும் அரசின் அனுமதி கோரி, வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள 110 பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான  தமிழன் பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Related Stories: