முதல்வர் கூறியது போல் ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர்-டிஜிபி சைலேந்திரபாபு உறுதி

ராமநாதபுரம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்படி, தமிழகத்தில் ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். இதுதொடர்பாக சரகம், உட்கோட்ட அளவில் காவல் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 6 மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை நெட் ஒர்க் அறிந்து ஆந்திரா வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்துள்ளோம். பள்ளிகள், கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் ஆய்வு கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கடல் வழி கடத்தலை போலீசாரின் பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிகழ்ந்த குற்றச்செயல்கள் தொடர்பாக புகார்கள் அளித்தால் எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க், டிஐஜி மயில்வாகனன், எஸ்பிக்கள் கார்த்திக், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: