கண்ணமங்கலத்தில் ஏரி நீரில் நீந்தி சென்று அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்த மின்வாரிய ஊழியர்கள்-பொதுமக்கள் பாராட்டு

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் ஏரியின் நடுவே அறுந்து விழுந்த மின்கம்பியை நேற்று மின் வாரிய ஊழியர்கள் ஏரியில் நீந்தி சென்று சரி செய்தனர்.கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று காலை 10மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மின் தடை ஏற்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய பணியாளர்கள், உதவி மின்பொறியாளர் சிலம்பரசன் தலைமையில் விரைந்து வந்து மின்துண்டிப்பிற்கான காரணத்தை கண்டறிந்தனர்.

அப்போது, கண்ணமங்கலம் ஏரியின் நடுவே உள்ள மின்கம்பத்திற்கும், கரையிலிருக்கும் மின்கம்பத்திற்கும் இடையே உள்ள மின்கம்பி அறுந்து ஏரியில் விழுந்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த மின்பணியாளர்கள் ஏரியின் நடுவே டியூப் மூலம் நீந்தி சென்று, மின்கம்பியை எடுத்து துண்டிப்பை சரி செய்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் துணிச்சலாக ஏரியின் நடுவே நீந்தி சென்று மின் இணைப்பை சரிசெய்த மின்வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

Related Stories: