எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் எதிரொலி அதிமுகவில் சேர பாஜ உதவியை நாடும் சசிகலா: விரைவில் மாற்றம் வரும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்த்து வருவதால், தற்போது பாஜ தலைவர்களின் உதவியை சசிகலா நாடி உள்ளார். இதனால், விரைவில் மாற்றம் வரும் என அதிமுக தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சொத்து குவிப்பு 4 வழக்கில் ஆண்டுகள் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதுவரை அரசியலில் என்ட்ரி ஆகாமல் அமைதியாக இருந்தார்.

பெங்களூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி சசிகலா வெளியே வந்தபோது, சென்னை வரை பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து, சசிகலா தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொண்டதுடன், அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தொடர்ந்து நீடித்து வருவதாக கூறினார். அதிமுக கொடி கட்டிய காரில்தான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா வந்தார். அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரமாண்ட ரோடு ஷோ மூலம் அதிமுகவில் தனது செல்வாக்கு இன்னும் அதிகளவில் உள்ளதாக காட்டிக் கொண்டார். இதன்மூலம், அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தனக்கு மிகப்பெரிய ஆதரவு தருவார்கள் என்று சசிகலா நினைத்தார். ஆனால், சசிகலா நினைத்தது நடக்கவில்லை. அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரிய அளவில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதையடுத்து சசிகலா அமைதியானார்.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தது. இதனால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

இதை பயன்படுத்தி மீண்டும் அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்தார். பல அதிமுக நிர்வாகிகளுக்கு சசிகலாவே தொலைபேசி மூலம் பேசி, ஜெயலலிதா கண்ட கனவை நாம் இணைந்து நிறைவேற்றுவோம் என்று ஆசை வார்த்தை கூறினார். ஆனால், இதுபோன்ற சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு அதிமுக தொண்டர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை. சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளின் ஆதரவுடன் பொதுச்செயலாளராக முயற்சி செய்தார்.

இதனால், விரக்தி அடைந்த ஓபிஎஸ், திடீரென சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ஓபிஎஸ், ஒவ்வொரு முறையும் தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று நினைக்கும் போதெல்லாம், இதுபோன்ற ஒரு யுக்தியை கடைபிடிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. சமீபத்தில் கூட, தேனி மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை நடத்தி, சசிகலா உள்ளிட்ட அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றார். இதனால், தொண்டர்களிடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் சசிகலா தரப்பு உற்சாகம் அடைந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாளே, சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர். இதனால், கட்சி தலைமை சசிகலா விஷயத்தில் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. சசிகலாவும் விரக்தி அடைந்தார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ரவீந்திரநாத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், சசிகலா தற்போது டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் சிலரின் உதவியை சாடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

டெல்லி பாஜ தலைவர்களிடம், மீண்டும் என்னை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ், எடப்பாடியிடம் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழகத்தில் பாஜவை அதிமுக தலைமை கழட்டி விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவை அதிமுக சேர்க்காது. அதனால், என்னை (சசிகலா) அதிமுகவில் சேர்த்தால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜ கூட்டணி தொடர நடவடிக்கை எடுப்பேன் என்று சசிகலா பாஜ தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார். இதுபற்றி பாஜ டெல்லி தலைமையும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக கட்சியில் விரைவில் சசிகலா சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்னை அதிமுகவில் சேர்த்தால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜ கூட்டணி தொடர நடவடிக்கை எடுப்பேன்.

Related Stories: