பாஜ கட்சியை விரட்ட ஈகோ பார்க்காமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்: கோவையில் திருமாவளவன் எம்பி பேட்டி

பீளமேடு: பாஜ கட்சியை விரட்ட ஈகோ பார்க்காமல் அனைத்து  கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் எம்பி கூறினார். கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: உத்தரபிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ சரிவை சந்தித்துள்ளது. எனவே, இது பாஜவுக்கு சாதகம் என கூற முடியாது. நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பாஜ பேசவில்லை. அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும், இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜ கட்சி வெற்றி பெற்று விடக் கூடாது. நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜவை விரட்ட வேண்டும். அதற்கு ஈகோ பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

எந்த கட்சியின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அனைத்து  மதசார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. ஆணவ கொலைகளை பாஜ ஊக்கப்படுத்தும் என்பதால் தமிழக முதல்வர், இதற்கு எதிராக சட்டத்தை இயற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் சாதி, மத மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு உருவாக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்த தனிப்பிரிவை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: