திருவள்ளூர் அருகே அரசு பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுரை

திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்து பூண்டி வழியாக பென்னலூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த அரசு பஸ் பூண்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் பள்ளி மாணவர்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உடனடியாக தனது காரை விட்டு கீழே இறங்கி அரசு பஸ்சை நிறுத்துமாறு சைகை காட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் வண்டியை நிறுத்தி பஸ் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கி வந்த மாணவர்களிடம் இதுபோன்று ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது. அனைவரும் பஸ்சின் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்.

அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களுக்கு சரி வர பஸ் வசதி இல்லாததால் பஸ்சில் இவ்வாறு தினமும் அவதிப்பட்டு செல்கிறோம். எனவே பென்னலூர்பேட்டை, பூண்டி ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு திருவள்ளூரிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏவிடம் முறையிட்டனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்து கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பின்னர் அவர் அந்த அரசு பஸ்சின் டிரைவர் மற்றும் நடத்துனரை அழைத்து பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அந்த பஸ் பென்னலூர்பேட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

Related Stories: