நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,838 பேர் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு: 21 மாநகராட்சியில் 11 பெண் மேயர்கள் யார்; மேயர், தலைவர்களை அறிய மக்கள் ஆர்வம்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,838 பேர் வேட்பாளர்கள் இன்று வார்டு கவுன்சிலர்களாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதற்காக அனைத்து பணிகளும் தயாராக உள்ளது. இந்நிலையில்  இன்று காலை 9.30 மணியில் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள். இதைத்தொடர்ந்து மார்ச் 4ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு மீண்டும் மன்ற கூட்டம் நடைபெறும். அப்போது, மாநகராட்சி மேயர்,  நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 4ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 2.30 மணிக்கு துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர்கள் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 21 மாநகராட்சியிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளதால் திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அறிவிக்கும் நபர்களே மேயர் மற்றும் துணை மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அதேபோன்று நகராட்சியிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைமை அறிவிக்கும் கவுன்சிலர் ஒருவரே தலைவராகவும், துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும் இழுபறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால், அதிக அளவு பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களே வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி ஆகிய 11 மாநகராட்சி மேயர்களாக பெண்களே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், இந்த மாநகராட்சிகளுக்கு பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதுகுறித்து திமுக கட்சி தலைமை இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், மேயர் பதவியை கைப்பற்ற 11 மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் மற்றும் மற்ற 10 மாநகராட்சிகளில் வெற்றிபெற்றுள்ள ஆண் கவுன்சிலர்களும் கட்சி தலைமை தன்னை அறிவிக்குமா என்ற கேள்வியுடன் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். ஒரு சில மாநகராட்சி பகுதியில் உள்ள அமைச்சர்களும், முன்னணி தலைவர்களும் சிலரது பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும், இறுதி முடிவை கட்சி தலைமையே அறிவிக்கும் என்பதால் கவுன்சிலர்களும் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதேபோல பொதுமக்களும் தங்களின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

* சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் பதவியேற்பு

சென்னையில் உள்ள 200 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்காக 2 ஆயிரத்து 670 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர்கள் 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும், காங்கிரஸ் கட்சி 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜ., அமமுக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 200 வெற்றி வேட்பாளர்களும் இன்று வார்டு கவுன்சிலர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதற்காக சென்னை ரிப்பன் மாளிகை மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Stories: