கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

சென்னை, ஜூன் 12: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் துரைமுருகன் ‘கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்’ என்று நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்க உருக்கத்துடன் பேசினார். சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, காரம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர்2000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஆட்சியில் இருந்த போது புரட்சிகரமான திட்டங்களை, சட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார். அது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் எனக்கு தந்தை போன்றவர். என்னை வளர்த்தவரும் அவர்தான். அதை நினைக்கும் போது தற்போதும் என் கண் கலங்குகிறது. 2 குடியரசு தலைவர்களை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர்.
குறிப்பாக முதல்முறையாக ஒரு பெண் குடியரசுத் தலைவரை நியமனம் செய்ய காரணமாக இருந்தவர் கலைஞர் தான். அவரைப் போன்ற துணிச்சல் மிக்க ஒரு தலைவரை பார்க்கவே முடியாது. கலைஞரைப் போல இனி ஒரு தலைவரை உலகத்தில் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் எந்த ஒரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் பெற முடியாத வெற்றியை திமுக பெற்றுள்ளது. குறிப்பாக பெரும்புதூர் தொகுதி எம்பியான டி.ஆர்‌.பாலு ஏறக்குறைய 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுபோன்ற வாக்கு வித்தியாசம் எல்லா தொகுதிகளிலும் திமுகவிற்கு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் உள்ள எம்பிக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போலவே 40க்கு 40 வென்று காட்டி சாதித்து விட்டார்,’’ என்றார்.

The post கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: