நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

சென்னை, ஜூன் 12: நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளதாகவும், தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகவும் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எல்லிஸ்புரம் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில், ₹1.62 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 6 வகுப்பறைகளை கொண்ட புதிய சென்னை நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர், தயாநிதி மாறன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி மக்கள் பணியே மகேசன் பணி என்பது போல் துறைமுகம் பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரூ.1.62 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து உள்ளோம். இதன்மூலம், பெருமளவில் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

இந்தியாவிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் சிறந்த முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். பாஜவை எதிர்த்தும், பிரதமர் மோடியை எதிர்த்தும், அமித்ஷாவை எதிர்த்தும் தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். தமிழகத்திற்கு நிதி பங்கீடு தொடர்ந்து குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அதை சரி செய்வதுதான் எங்களின் முதல் பணி. கர்நாடகாவை சேர்ந்தவர் அமைச்சராக இருந்தாலும் அமைச்சராக செயல்பட ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளது. தன்னிச்சையாக அவர் செயல்பட முடியாது.

தமிழகத்தில் மட்டும்தான் நீட் எதிர்ப்பிற்கு குரல் எழுப்பி வருவதாகவும், பிற மாநிலத்தில் நீட் எதிர்ப்பு இல்லை என்பது போலவும் பாஜ பொய் பிரசாரம் செய்து வந்தது. தமிழகத்தை விட அதிக தற்கொலை நடந்திருக்க கூடிய மாநிலம் ராஜஸ்தான் மாநிலம் தான். நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு ஒழுங்கான முறையில் நடந்து வருகிறது. வட மாநிலங்களில் பல்வேறு குளறுபடிகளில் நீட் தேர்வுகள் நடந்து வருகிறது. இது மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதேபோல நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும், கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் தேர்வாகவில்லை என்ற ஒரு சூழலும் உருவாகியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்படும். இந்த குளறுபடிகளை எல்லாம் தடுக்க நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கான நடவடிக்கைளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்.
நீட் தேவையில்லை என்பது இந்தியா முழுவதும் ஒலிக்கும் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

பாஜ கூட்டணி ஆட்சிக்கு இடுப்பு வலி இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது, விரைவில் பிரசவம் ஆகிவிடும். ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது அடக்கமாக, அமைதியாக, மரியாதையுடன் செயல்பட வேண்டும். அவர் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். மத்திய சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதனை சீர் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதனை சீர் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: